துபாய் கேரளா முஸ்லீம் கலாச்சார மையத்தில் அகமும் புறமும்..

மே 22ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துபாய் கேரளா முஸ்லீம் கலாச்சார மையத்தில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆண்-பெண் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முகாமில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்கும் முறைகள், உடல் மற்றும் உளவியல் ரீதியாக இறைவன் நமக்கு வழங்கியுள்ள கடமைகள் மற்றும் உரிமைகளை அறிதல், வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்நோக்கும் முறைகள் ஆகியவைக் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



பெண் பொறியாளர் ஷாமிலா அவர்களின் தயாரிப்பில் உருவான இந்த நிகழ்ச்சியின் பாடத்திட்டங்களை, மனநல ஆலோசகர் ஹூஸைன் பாஷா அவர்கள் இந்த முகாமில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் எளிதில் புரியும்படி சிறப்பாக பயிற்சியளித்தார். கணவன்-மனைவிக்கிடையே பரஸ்பர அன்பை வளர்க்கவும், அதிகரித்துவரும் விவாகரத்துகளை குறைக்கவும் இது போன்ற நிகழ்ச்சிகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், மேலும் இந்நிகழ்ச்சியை பல்வேறு இடங்களிலும் நடத்தவேண்டும் எனவும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.



இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கூத்தாநல்லூர் கே.என்.ஆர். யுனிட்டி என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை அப்துல்லாஹ் சேட், பைரோஸ்கான் உள்ளிட்ட குழுவினரும், ஊடக ஒருங்கிணைப்பை பரங்கிப்பேட்டை அப்துல் ஹமீது, கீழக்கரை ஜெய்னுலாபுதீன், அக்கரை சதாம் ஹூசைன் ஆகியோரும் சிறப்பாக செய்திருந்தனர்.